மாதவிடாய் காலங்களில் நீங்கள் செய்யும் இந்த சிறு தவறுகள் ஆபத்தானதா? பெண்கள் அவசியம் கவனிக்க வேண்டியவை!

செய்தி பிரிவு : மாதவிடாய் கால சுகாதாரம் என்பது இன்றும் பல வீடுகளில் வெளிப்படையாகப் பேசப்படாத ஒன்றாகவே உள்ளது. சரியான விழிப்புணர்வு இல்லாததால், பல பெண்கள் செய்யும் சின்னஞ்சிறு தவறுகள் பிற்காலத்தில் கருப்பை தொற்று அல்லது சிறுநீர் பாதை தொற்று (UTI) போன்ற பெரிய உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. குறிப்பாக, தயக்கம் காரணமாகப் பல பெண்கள் சரியான ஆலோசனையைப் பெறாமல் இருப்பது அவர்களின் அன்றாட வாழ்வையும் ஆரோக்கியத்தையும் வெகுவாகப் பாதிக்கிறது.
இரத்தப்போக்கு குறைவாக இருந்தாலும், 4 முதல் 6 மணி நேரத்திற்கு ஒருமுறை சானிட்டரி பேட்களை மாற்றுவது மிக அவசியம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். வாசனை திரவியங்கள் அல்லது ரசாயனம் கலந்த சோப்புகளைத் தவிர்த்து, மிதமான வெந்நீரைப் பயன்படுத்துவதே சிறந்தது. சுத்தமில்லாத கைகளால் பேட்களை மாற்றுவதும், இறுக்கமான ஆடைகளை அணிவதும் கிருமித் தொற்றுக்கு வழிவகுக்கும். எனவே, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் தேவையற்ற அரிப்பு அல்லது வலியை அலட்சியப்படுத்தாமல், சரியான சுகாதார முறைகளைப் பின்பற்றுவது ஒவ்வொரு பெண்ணின் கடமையாகும்.