மருத்துவச் சீட் வாங்கித் தருவதாகக் கூறி 11 லட்சம் ரூபாய் மோசடி செய்த வாலிபர் சென்னையில் அதிரடி கைது
March 16, 2026

சென்னையைச் சேர்ந்த அபர்ணா என்பவர் தனது மகனுக்கு மருத்துவச் சீட் வாங்க முயன்றபோது, நெல்லையைச் சேர்ந்த ராம் கமல் என்பவரிடம் 11 லட்சம் ரூபாயை இழந்துள்ளார். முகநூல் மூலம் அறிமுகமான ராம் கமல், தனக்கு அரசியல் செல்வாக்கு இருப்பதாகக் கூறி பணத்தைச் சுருட்டியுள்ளார். சொன்னபடி சீட் வாங்கித் தராமலும் பணத்தைத் திருப்பிக் கொடுக்காமலும் ஏமாற்றியதால், பாதிக்கப்பட்ட பெண் மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரைத் தொடர்ந்து போலீஸார் ராம் கமலைக் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அவர் ஒரு தொடர் மோசடி பேர்வழி என்பதும், ஏற்கனவே மதுரை அண்ணாநகர் காவல் நிலையத்தில் இவர் மீது மோசடி வழக்கு இருப்பதும் அம்பலமானது. தற்போது கைதான ராம் கமல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.