மத்திய கிழக்கு போர் பதற்றத்தால் எரிபொருள் தட்டுப்பாட்டை தவிர்க்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை

மேற்கு ஆசியாவில் நிலவும் போர் சூழலால் கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருக்க மத்திய அமைச்சர்கள் குழுவை அரசு அமைத்துள்ளது. பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையிலான இக்குழுவில் அமித் ஷா, நிர்மலா சீதாராமன் மற்றும் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். சர்வதேச சந்தையில் இறக்குமதி செலவு அதிகரித்துள்ள நிலையிலும், உள்நாட்டு எண்ணெய் நிறுவனங்களின் தேவையை பூர்த்தி செய்யவும் தடையற்ற விநியோகத்தை உறுதி செய்யவும் இந்த கண்காணிப்பு குழு தீவிரமாக செயல்படும்.
பொதுமக்களின் சுமையை குறைக்க பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு அதிரடியாக குறைத்துள்ளது. பெட்ரோல் மீதான வரி லிட்டருக்கு 13 ரூபாயிலிருந்து 3 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது, டீசல் மீதான 10 ரூபாய் வரி முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளது. நாடு முழுவதும் எரிபொருள் இருப்பு போதிய அளவில் உள்ளதாகவும், விற்பனை நிலையங்கள் வழக்கம் போல் செயல்படுவதால் பொதுமக்கள் வதந்திகளை நம்பி அச்சமடைந்து தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்க வேண்டாம் என்றும் மத்திய பெட்ரோலிய அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது.