மத்திய கிழக்கில் நிலவும் கடும் பதற்றங்களுக்கு மத்தியில் ஹார்முஸ் ஜலசந்தியை கடந்து இந்தியாவிற்கு வருகிறது எண்ணெய் கப்பல் ஜக் லட்கி

ஐக்கிய அரபு அமீரகத்தின் ஃபுஜைரா துறைமுகத்தில் இருந்து 80,800 டன் கச்சா எண்ணெயுடன் இந்தியக் கப்பலான ‘ஜக் லட்கி’ பாதுகாப்பாகப் புறப்பட்டது. கடந்த மார்ச் 14 அன்று எண்ணெய் முனையத்தில் தாக்குதல் நடந்ததாகக் கூறப்படும் சூழலில், பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்றி எண்ணெய் ஏற்றும் பணி வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. இக்கப்பலில் உள்ள அனைத்து இந்திய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய கிழக்கின் பதற்றமான சூழலில் ஹார்முஸ் ஜலசந்தியை பாதுகாப்பாகக் கடந்த நான்காவது இந்தியக் கப்பல் இது என்பதால் புது தில்லி நிம்மதி அடைந்துள்ளது. தற்போது இப்பகுதியில் 22 இந்தியக் கப்பல்களும் 600-க்கும் மேற்பட்ட மாலுமிகளும் உள்ளனர். அவர்களின் பாதுகாப்பை வெளியுறவு அமைச்சகம் தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முன்னதாக ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்தா தேவி’ ஆகிய கப்பல்களும் இப்பாதையை வெற்றிகரமாகக் கடந்தது குறிப்பிடத்தக்கது.