மணமகள் 13, மணமகன் 40! தெலங்கானாவில் குழந்தை திருமண சர்ச்சை

தெலங்கானாவின் ரங்கா ரெட்டி மாவட்டத்தில் 13 வயது பள்ளி மாணவிக்கு 40 வயது நபருடன் கட்டாயத் திருமணம் செய்து வைக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சட்டத்தை மீறி நடந்த இந்த திருமணத்திற்குப் பிறகு, எட்டாம் வகுப்பு படிக்கும் அந்த மாணவியை குழந்தை பாதுகாப்பு ஆணையம் மீட்டு காப்பகத்தில் சேர்த்துள்ளது. அங்கு அவளுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றன. இச்சம்பவம் தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட மாப்பிள்ளை, அவரது மனைவி, சிறுமியின் தாய், புரோகிதர் மற்றும் திருமண ஏற்பாட்டாளர் ஆகியோரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட ஸ்ரீனிவாஸ் கவுர் ஏற்கனவே திருமணமானவர். இவர் அந்த சிறுமியின் வீட்டின் அருகே வசித்து வந்துள்ளார். கடந்த மே மாதம், ஒரு திருமண ஏற்பாட்டாளர் மூலம் சிறுமியின் குடும்பத்திற்கு இவர் திருமண முன்மொழிவை அனுப்பியுள்ளார். பின்னர் கட்டாயமாக திருமணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பிறகு, அந்த மாணவி தனது பள்ளி ஆசிரியரிடம் இச்சம்பவம் பற்றி கூறியுள்ளார், அவர் உடனடியாக உள்ளூர் அதிகாரிகள் மற்றும் போலீஸில் புகார் அளித்துள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் மீது POCSO சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படலாம் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.