மகாகாலேஸ்வரர் கோவிலில் பூசாரிகளுக்கு புதிய உடை அமல்! ஏன் இந்த திடீர் மாற்றம்?

மத்தியப் பிரதேசத்தின் உஜ்ஜைனியில் உள்ள ஸ்ரீ மகாகாலேஸ்வரர் கோவில் நிர்வாகம், பக்தர்களிடம் நடக்கும் மோசடிகளைத் தடுக்க ஒரு முக்கிய முடிவை எடுத்துள்ளது. இனிமேல், கோவிலில் உள்ள 16 பதிவுசெய்யப்பட்ட பூசாரிகள், 22 புரோகிதர்கள் மற்றும் சுமார் 45 பிரதிநிதிகள் அனைவரும் ஒரு குறிப்பிட்ட சீருடையை (டிரஸ் கோட்) கட்டாயம் பின்பற்ற வேண்டும். இதன் முக்கிய நோக்கம், உண்மையான பூசாரிகளை பக்தர்கள் எளிதில் அடையாளம் காணவும், அங்கீகரிக்கப்படாத நபர்கள் நுழைவதைத் தடுக்கவும் ஆகும்.
நிர்வாகி பிரதம் கௌசிக் உத்தரவின்படி, சீருடையுடன் அனைவருக்கும் அடையாள அட்டையும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த அட்டையில் பெயர், புகைப்படம், இரத்த வகை மற்றும் மொபைல் எண் போன்ற விவரங்கள் இருக்கும். இதன் மூலம், பக்தர்கள் குழப்பமடைவது தவிர்க்கப்படும். மேலும், போலி வேடமிட்டு வரும் மோசடி கும்பலிடம் இருந்து அப்பாவி பக்தர்கள் ஏமாறுவது தடுக்கப்படும். இந்த நடவடிக்கையால் கோவிலின் ஒழுங்கு மற்றும் பாதுகாப்பு உறுதி செய்யப்படும் என்று நிர்வாகம் நம்புகிறது.