பிஎம் கிசான் 22-வது தவணை: விவசாயிகளுக்கு நற்செய்தி.. பிப்ரவரியில் ரூ.2,000 வருதா?

மத்திய அரசின் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (PM-Kisan) திட்டத்தின் கீழ் பயன்பெறும் நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான விவசாயிகள், தற்போது 22-வது தவணை நிதிக்காக ஆவலுடன் காத்திருக்கின்றனர். விவசாயிகளின் சாகுபடிச் செலவுகளுக்கு உதவும் வகையில், ஆண்டுக்கு மூன்று தவணைகளாக மொத்தம் 6,000 ரூபாய் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், அடுத்த தவணையாக ரூ. 2,000 விவசாயிகளின் வங்கி கணக்கில் பிப்ரவரி மாதமே டெபாசிட் செய்யப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
மத்திய அரசு இத்திட்டத்தில் முறைகேடுகளைத் தவிர்க்க தகுதியற்ற பயனாளிகளைத் தொடர்ந்து நீக்கி வருகிறது. சிறு மற்றும் குறு விவசாயிகள் மட்டுமே இந்தப் பயனைப் பெற முடியும். குறிப்பாக, ஒரு குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற தகுதியுடையவர். அரசு ஊழியர்கள், மாதம் ரூ.10,000-க்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள் மற்றும் வருமான வரி செலுத்துபவர்கள் இத்திட்டத்திற்கு தகுதியற்றவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
உங்கள் நிலையை (Status) சரிபார்க்கும் முறை:
விவசாயிகள் தங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை மொபைல் அல்லது கணினி மூலம் மிக எளிதாகக் கண்டறியலாம்:
- முதலில், அதிகாரப்பூர்வ இணையதளமான pmkisan.gov.in பக்கத்திற்குச் செல்லவும்.
- முகப்புப் பக்கத்தில் உள்ள ‘Know Your Status’ என்ற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கவும்.
- அங்கு உங்கள் பதிவு எண்ணை (Registration Number) உள்ளிட வேண்டும். (எண் தெரியவில்லை என்றால், ‘Know Your Registration Number’ மூலம் கண்டறியலாம்).
- திரையில் தோன்றும் கேப்ட்சா குறியீட்டைச் சரியாகப் பதிவிடவும்.
- இறுதியாக, ‘Get Data’ பொத்தானை அழுத்தினால், உங்கள் தவணைத் தொகை நிலை மற்றும் தகுதி விவரங்கள் திரையில் தோன்றும்.
இணையதளம் தவிர, ‘PM Kisan’ மொபைல் செயலி மூலமும் விவரங்களை அவ்வப்போது சரிபார்த்துக் கொள்ளலாம். மிக முக்கியமாக, குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் இ-கேஒய்சி (e-KYC) முறையை முடித்தவர்களுக்கு மட்டுமே நிதி விடுவிக்கப்படும் என்று அதிகாரிகள் தெளிவுபடுத்தியுள்ளனர். எனவே, விவசாயிகள் உடனடியாக தங்கள் இ-கேஒய்சி-யை அப்டேட் செய்ய அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பிப்ரவரி இறுதிக்குள் நிதி விடுவிக்கப்பட வாய்ப்புள்ளதால், விவசாயிகள் தங்கள் வங்கி கணக்கு விவரங்கள் மற்றும் ஆதார் இணைப்பு சரியாக உள்ளதா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வது அவசியம்.