பாகிஸ்தான் மேட்ச்: சூர்யசேனாவுக்கு ரோஹித் கொடுத்த வார்னிங்! அசால்ட்டா இருந்தா அவ்வளவுதான்!

பாகிஸ்தான் மேட்ச்: சூர்யசேனாவுக்கு ரோஹித் கொடுத்த வார்னிங்! அசால்ட்டா இருந்தா அவ்வளவுதான்!

டி20 உலகக்கோப்பையில் கிரிக்கெட் ரசிகர்களின் ரத்த அழுத்தத்தை எகிறவைக்கும் இந்தியா – பாகிஸ்தான் மகா யுத்தத்திற்கு களம் தயாராகிவிட்டது. வரும் ஞாயிற்றுக்கிழமை (பிப்ரவரி 15) கொழும்பு பிரேமதாசா மைதானத்தில் நடைபெறவுள்ள இந்த ஹை-வோல்டேஜ் போட்டி குறித்து, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா சில அதிரடியான மற்றும் எச்சரிக்கையான கருத்துகளைப் பகிர்ந்துள்ளார்.

பழைய கணக்குகள் செல்லாது!

இந்திய அணி பாகிஸ்தானுக்கு எதிராக உலகக்கோப்பை வரலாற்றில் அசுர பலத்துடன் திகழ்ந்து வருகிறது. இதுவரை மோதிய 8 போட்டிகளில் 7 முறை இந்தியா வெற்றி பெற்றுள்ளது. ஆனால், இந்த புள்ளிவிவரங்களை வைத்து மட்டும் வெற்றியைத் தீர்மானிக்க முடியாது என ரோஹித் சர்மா சூர்யகுமார் யாதவ் தலைமையிலான ‘சூர்யசேனா’வை எச்சரித்துள்ளார்.

“கடந்த காலங்களில் யார் வென்றார்கள், எத்தனை முறை வென்றார்கள் என்பது இப்போது முக்கியமல்ல. களத்தில் இறங்கும் அந்த குறிப்பிட்ட நாளில் யார் சிறப்பாகச் செயல்படுகிறார்களோ, அவர்களுக்கே வெற்றி கிடைக்கும். இந்தியா தான் ஃபேவரிட் என்று சொல்வதை நான் ஒருபோதும் நம்புவதில்லை,” என ரோஹித் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

மாறிப்போன கிரிக்கெட் சூழல்

கடந்த பத்து ஆண்டுகளில் சர்வதேச டி20 கிரிக்கெட் பெரும் மாற்றத்தைச் சந்தித்துள்ளதை ரோஹித் சுட்டிக்காட்டினார். “இப்போது சிறிய அணிகள் கூட டி20 போட்டிகளில் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுக்கின்றன. நாம் கடந்த காலத்தில் காட்டிய ஆதிக்கம் அந்த இரண்டு புள்ளிகளைப் பெற்றுத்தந்துவிடாது. கவனக்குறைவாகவோ அல்லது அலட்சியமாகவோ இருந்தால், வெறும் கையோடு தான் வீடு திரும்ப வேண்டியிருக்கும்,” என அவர் இளம் வீரர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

2021 கசப்பான பாடம்

பாகிஸ்தானுக்கு எதிரான இந்தியாவின் தோல்வி வரலாற்றில் 2021 உலகக்கோப்பை ஒரு கசப்பான நினைவாகும். பாபர் அசாம் தலைமையிலான பாகிஸ்தான் அணி, ரோஹித் சர்மா இடம்பெற்றிருந்த இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அந்த வலியைச் சுட்டிக்காட்டிய ரோஹித், களத்தில் காட்டும் செயல்பாடே வெற்றியைத் தீர்மானிக்கும் என்பதை மீண்டும் வலியுறுத்தினார்.

கோடிக்கணக்கான ரசிகர்கள் ஞாயிற்றுக்கிழமை ஆட்டத்திற்காகக் காத்திருக்கும் வேளையில், ரோஹித்தின் இந்த எச்சரிக்கை இந்திய வீரர்களை இன்னும் உத்வேகத்துடன் செயல்பட வைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *