பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் சிறையில் கொல்லப்பட்டாரா? இணையத்தில் பெரும் பரபரப்பு

இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக ராவல்பிண்டியில் உள்ள அதியலா சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் குறித்து சமீபகாலமாக பரபரப்பான ஊகங்கள் பரவி வருகின்றன. கடந்த இரண்டு நாட்களாக, சிறைக்குள்ளேயே அவர் கொல்லப்பட்டதாக சமூக வலைதளங்களில் பல கூற்றுக்கள் பரவி வருகின்றன. இது குறித்து எந்தவொரு அதிகாரப்பூர்வமான அல்லது நம்பகமான செய்தி நிறுவனமும் தகவலை உறுதிப்படுத்தவில்லை என்றாலும், குடும்பத்துடன் சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டதும், தனி அறையில் அவர் அடைக்கப்பட்டதும் இந்த வதந்திகள் தீவிரமடைய காரணமாக அமைந்தது.
கடந்த வாரம் சந்திப்புக்கான குறிப்பிட்ட நாளில் இம்ரான் கானின் சகோதரிகளுக்கு அவரை சந்திக்க அனுமதி மறுக்கப்பட்டது. அவர்கள் பல மணி நேரம் சிறைக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்பத்தின் கோபம் மற்றும் அரசாங்கத்தின் மௌனம் பிடிஐ (PTI) ஆதரவாளர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழ்நிலையைப் பயன்படுத்தி, ‘மரணம்’ குறித்த கூற்றுக்கள் சமூக ஊடகங்களில் வலுப்பெற்றுள்ளன. அரசாங்கம் உடனடியாக அவரது பாதுகாப்பு மற்றும் உடல்நிலை குறித்து தெளிவான தகவலை வெளியிடவில்லை என்றால், இந்த ஊகங்களும் பதட்டமும் அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.