பாகிஸ்தானை வீழ்த்துமா இந்தியா? கங்குலியின் அதிரடி கணிப்பால் கலக்கத்தில் பாபர் அசாம்!

உலகக்கோப்பை என்றாலே இந்தியா – பாகிஸ்தான் மோதல் தான் உச்சகட்ட எதிர்பார்ப்பு. வரும் 15-ம் தேதி நடைபெறவுள்ள மெகா போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலி தெரிவித்துள்ள கருத்து கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போதைய ஃபார்மில் இருக்கும் இந்திய அணியை வீழ்த்துவது பாகிஸ்தானுக்கு கிட்டத்தட்ட சாத்தியமற்ற ஒன்று என ‘மகாராஜா’ கங்குலி அதிரடியாகத் தெரிவித்துள்ளார்.
பும்ரா மற்றும் இளம் வீரர் அபிஷேக் சர்மா போன்ற நட்சத்திரங்களின் அபார ஆட்டத்தால் இந்திய அணி அசுர பலத்துடன் இருப்பதாகவும், இதனால் பாபர் அசாம் மற்றும் அப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணி களத்தில் கடும் நெருக்கடியைச் சந்திக்கும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
மேலும், பாகிஸ்தானின் தொடர்ச்சியான ‘புறக்கணிப்பு’ நாடகங்கள் குறித்தும் கங்குலி தனது கண்டனத்தைப் பதிவு செய்துள்ளார். உலகக்கோப்பை போன்ற பெரிய தொடர்களில் ஒவ்வொரு புள்ளியும் முக்கியமானது என்றும், இதுபோன்ற முடிவுகள் ரசிகர்களை ஏமாற்றமடையச் செய்யும் என்றும் அவர் கூறினார். கங்குலியின் இந்த தன்னம்பிக்கையான பேச்சு இந்திய ரசிகர்களுக்கு உற்சாகத்தை அளித்துள்ள நிலையில், பாகிஸ்தான் தரப்பில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆதிக்கத்தை இந்தியா மைதானத்திலும் நிரூபிக்குமா என்பதைப் பார்க்க கோடி கணக்கான ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.