பதவி விலகலா? தார்மீகமா? எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையில்லா தீர்மானத்தால் ஓம் பிர்லா அதிரடி முடிவு!

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்துள்ள நிலையில், அவர் ஒரு முன்னோடியில்லாத முடிவை எடுத்துள்ளார். அரசியலமைப்பின் 96-வது பிரிவின் கீழ், தன் மீது பதவி நீக்கத் தீர்மானம் நிலுவையில் இருப்பதால், தார்மீக அடிப்படையில் அவைத் தலைவர் (Presiding Officer) பொறுப்பிலிருந்து தற்காலிகமாக விலகி இருக்கப்போவதாக அவர் அறிவித்துள்ளார்.
ராகுல் காந்தி உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் பேசுவதற்குத் தடையாக இருந்தது மற்றும் எம்.பி.க்களை இடைநீக்கம் செய்ததில் ஒருதலைப்பட்சமாகச் செயல்பட்டதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த 118 உறுப்பினர்கள் கையெழுத்திட்ட இந்தத் தீர்மானம், வரும் மார்ச் 9-ம் தேதி ஏற்றுக்கொள்ளப்பட வாய்ப்புள்ளது.
தற்போது மக்களவை செயலகம் இந்த விவகாரத்தை ஆய்வு செய்து வரும் நிலையில், விதிகள் மற்றும் நடைமுறைகளின்படி உரிய நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரே உத்தரவிட்டுள்ளார். ஜி.வி. மாவலங்கர், பலராம் ஜாக்கர் போன்ற முன்னாள் சபாநாயகர்களும் கடந்த காலங்களில் இத்தகைய நம்பிக்கையில்லா தீர்மானங்களை எதிர்கொண்டுள்ளனர். இருப்பினும், ஓம் பிர்லாவின் இந்தத் தார்மீக விலகல் நாடாளுமன்ற அரசியலில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.