நேபாளத்தில் 5 முன்னாள் அமைச்சர்கள் உட்பட 55 பேர் மீது ஊழல் வழக்கு பதிவு! பொக்காரா விமான நிலையம் சிக்கல்

நேபாளத்தின் பொக்காரா சர்வதேச விமான நிலையத் திட்டத்தில் சுமார் 8.36 பில்லியன் நேபாள ரூபாய் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்டு, ஐந்து முன்னாள் அமைச்சர்கள் உட்பட மொத்தம் 55 பேர் மீது அந்நாட்டின் ஊழல் தடுப்பு நிறுவனம் சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. சீன நிதி உதவியுடன் கட்டப்பட்ட இந்த விமான நிலையத் திட்டத்தில் ஊழல் நடந்ததாகக் கூறப்படுகிறது. குற்றம் சாட்டப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள், பத்து முன்னாள் செயலாளர்கள் மற்றும் நேபாள சிவில் ஏவியேஷன் அத்தாரிட்டியின் (CAAN) தற்போதைய மற்றும் முன்னாள் உயர் அதிகாரிகள் அடங்குவர்.
பிரபல அன்னபூர்ணா சர்க்யூட்டின் நுழைவாயிலாக கருதப்படும் பொக்காரா விமான நிலையம் ஜனவரி 2023-இல் திறக்கப்பட்டாலும், இதுவரை வழக்கமான சர்வதேச விமானங்களை பெறவில்லை. ஊழல் தடுப்பு விசாரணை ஆணையத்தின் (CIAA) குற்றப்பத்திரிகையில், குறைந்த வட்டி கொண்ட சீனக் கடனைப் பயன்படுத்தியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஊழல் தொடர்பான வழக்கில் சீன ஒப்பந்ததாரர்கள் மற்றும் அவர்களது நேபாள பிரதிநிதிகள் மீதும் விசாரணை நடைபெற்று வருகிறது.