நேபாளத்தின் நூறு ரூபாய் நோட்டில் மீண்டும் ‘இந்தியப் பகுதி’ எல்லைத் தகராறு சூடுபிடித்தது

நேபாள ராஷ்டிர பாங்க் (Nepal Rastra Bank) வெளியிட்ட புதிய 100 நேபாள ரூபாய் நோட்டுகளில், இந்தியாவின் காலாபானி, லிபுலேக் மற்றும் லிம்பியாத்துரா பகுதிகள் மீண்டும் நேபாளத்தின் வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன் கே.பி. சர்மா ஒலி ஆட்சியில் உருவாக்கப்பட்ட சர்ச்சைக்குரிய வரைபடம் இது. புதிய நோட்டில் இந்த வரைபடம் அச்சிடப்பட்டதால் இந்தியா-நேபாள எல்லைப் பிரச்னை மீண்டும் பதற்றத்தை உருவாக்கியுள்ளது. இந்த ஒருதலைப்பட்சமான நடவடிக்கைக்கு இந்தியா ஆரம்பத்திலிருந்தே கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.
நேபாளத்தின் வரைபட மாற்றம் யதார்த்தத்தை மாற்றாது என்றும், இந்த முடிவை ஒருபோதும் ஏற்க முடியாது என்றும் இந்தியா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. 1816 ஆம் ஆண்டு சுகௌலி ஒப்பந்தத்தின்படி காளி ஆற்றின் மூலமான லிம்பியாத்துரா வரை தங்கள் பகுதி என்று நேபாளம் கூறுகிறது. ஆனால், காளி ஆற்றின் உண்மையான மூலம் உத்தரகாண்டில் உள்ள காலாபானி நீரூற்று என்றும், நேபாளத்தின் கூற்றுக்கு வரலாற்று ஆதாரம் இல்லை என்றும் இந்தியா கருதுகிறது. சர்ச்சைக்குரிய இந்த ரூபாய் நோட்டு வெளியீடு இரு நாடுகளின் இராஜதந்திர உறவுகளில் கொந்தளிப்பை அதிகரித்துள்ளது.