நீர்மூழ்கிக் கப்பலில் கடற்பயணம் மேற்கொண்டு புதிய வரலாறு படைக்கிறார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வரும் டிசம்பர் 28-ஆம் தேதி இந்தியக் கடற்படையின் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்து புதிய மைல்கல்லை எட்டவுள்ளார். கர்நாடகாவின் கார்வார் துறைமுகத்திலிருந்து இந்த வரலாற்றுப் பயணம் தொடங்குகிறது. இதன் மூலம் நீர்மூழ்கிக் கப்பலில் பயணம் செய்யும் இந்தியாவின் இரண்டாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை அவர் பெறுகிறார். முன்னதாக 2006-ஆம் ஆண்டு மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் இத்தகைய பயணத்தை மேற்கொண்டார். நான்கு நாள் பயணமாக அவர் கோவா, கர்நாடகா மற்றும் ஜார்கண்ட் மாநிலங்களுக்குச் சென்றுள்ளார்.
தனது பயணத்தின் இறுதிக்கட்டமாக டிசம்பர் 30 அன்று ஜார்கண்ட் செல்லும் குடியரசுத் தலைவர், ஜாம்ஷெட்பூரில் நடைபெறும் சந்தாலி மொழியின் ஓல் சிக்கி ஸ்கிரிப்ட் நூற்றாண்டு விழாவில் பங்கேற்கிறார். இதையொட்டி ராஞ்சியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. ஏற்கெனவே சுகோய் மற்றும் ரஃபேல் போர் விமானங்களில் பறந்து சாதனை படைத்த திரௌபதி முர்முவின் இந்த நீர்மூழ்கிக் கப்பல் பயணம், இந்திய ராணுவத்தின் மனவலிமையை அதிகரிக்கும் ஒரு முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.