நாங்க திருப்பி பரப்பினால் தாங்க மாட்டீர்கள் என ஊடகங்களுக்குத் தமிழக வெற்றிக் கழகம் கடும் எச்சரிக்கை
March 16, 2026

தமிழக வெற்றிக் கழகம் எந்தவொரு கட்சியுடனும் கூட்டணி குறித்துப் பேசவில்லை என்று அக்கட்சியின் ஐடி பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. டிஆர்பி ரேட்டிங்கிற்காகச் சில ஊடகங்கள் கற்பனையான செய்திகளைப் பரப்புவதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என அறிக்கை வெளியிட்டுள்ளது. முன்னதாகப் பவன் கல்யாண் குறித்துப் பரப்பப்பட்ட வதந்திகள் எப்படிப் பொய்யானது என்பதையும் தவெக சுட்டிக்காட்டியுள்ளது.
மக்களைத் திசைதிருப்ப பழைய பாணியில் பொய்ச் செய்திகளைச் சமைக்கும் போக்கு இனி அரசியலில் எடுபடாது என்று அக்கட்சி கூறியுள்ளது. தவெக குறித்துத் தவறான தகவல்களைப் பரப்பும் ஊடகங்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பதிலுக்குத் தவெகவும் களமிறங்கினால் அது ஊடகங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.