நமீபியா மோதலுக்கு முன் இந்தியாவுக்கு அதிர்ச்சி: அபிஷேக் சர்மா விளையாடுவது சந்தேகம்; பும்ரா குறித்து நற்செய்தி

டி20 உலகக்கோப்பையில் நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்திற்கு முன்னதாக இந்திய அணிக்கு ஒரு பின்னடைவு ஏற்பட்டுள்ளது. நட்சத்திர பேட்டர் அபிஷேக் சர்மா வயிற்று உபாதை காரணமாக இன்னும் முழு உடல் தகுதியை எட்டவில்லை என்று உதவி பயிற்சியாளர் ரையான் டென் டோஷேட் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 12-ம் தேதி நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் அபிஷேக் விளையாடாவிட்டால், அவருக்குப் பதிலாக சஞ்சு சாம்சன் அணியில் இடம் பெற அதிக வாய்ப்புள்ளது.
மறுபுறம், பந்துவீச்சு பிரிவில் இந்திய அணிக்கு பெரும் நிம்மதி கிடைத்துள்ளது. நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா டெல்லி அருண் ஜெட்லி மைதானத்தில் மீண்டும் களம் காண்கிறார். ஆல்-ரவுண்டர் வாஷிங்டன் சுந்தரும் அணியில் இணைந்துள்ளார், இருப்பினும் அவரது உடல்தகுதி குறித்து இன்னும் சிறிய அளவில் சந்தேகம் நீடிக்கிறது. பும்ராவின் வருகை அணிக்கு பலம் சேர்த்துள்ள நிலையில், நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் (Playing XI) முக்கிய மாற்றங்கள் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.