தெலங்கானாவில் தேர்தல் வாக்குறுதிக்காக 100 தெருநாய்கள் விஷம் வைத்து கொடூரமாக கொலை

மஞ்சேரியல் மாவட்டம் கிஷ்தாப்பூர் கிராமத்தில் சுமார் 100 தெருநாய்களுக்கு விஷ ஊசி செலுத்தி கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஊரை நாய் இல்லாத பகுதியாக மாற்றுவோம் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்ற பஞ்சாயத்து தலைவரே இந்த கொடூரத்தை அரங்கேற்றியதாக கூறப்படுகிறது. கொல்லப்பட்ட நாய்களின் உடல்கள் ஆற்றோரம் ரகசியமாக புதைக்கப்பட்ட நிலையில் விலங்கு நல ஆர்வலர்கள் தற்போது போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இது தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் செயலாளர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தெலங்கானாவில் கடந்த சில மாதங்களில் மட்டும் 1,300-க்கும் மேற்பட்ட நாய்கள் இதுபோன்று கொல்லப்பட்டிருப்பது சமூக ஆர்வலர்களிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் கண்டிப்பையும் மீறி நடைபெறும் இத்தகைய மனிதநேயமற்ற செயல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க கோரிக்கைகள் எழுந்துள்ளன.