தூக்கத்தில் திடுக்கிடும் உடல்! திடீரென உடல் ஏன் உதறுகிறது, அறிவியல் காரணம் என்ன

ஆழ்ந்த உறக்கத்தின்போது திடீரென உடல் உதறுவது அல்லது விழுவது போன்ற உணர்வு ஏற்பட்டு கண் விழிப்பது ஒரு பொதுவான நிகழ்வு. இது அறிவியல்ரீதியாக ‘ஹிப்னிக் ஜெர்க்’ என்று அழைக்கப்படுகிறது. பலரும் இந்த அனுபவத்தை எதிர்கொள்கின்றனர், இது பெரும்பாலும் கீழே விழுவது போன்ற கனவுகளுடன் தொடர்புடையது. இந்தத் திடீர் உதறல் சில வினாடிகள் தூக்கத்தைக் கெடுத்தாலும், பொதுவாக இது சாதாரணமானதுதான். ஹிப்னிக் ஜெர்க்கின் பின்னால் பல காரணங்கள் இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
ஆராய்ச்சியாளர்களின் கூற்றுப்படி, அதிகப்படியான காஃபின் மற்றும் புகையிலை உட்கொள்வது ஹிப்னிக் ஜெர்க் ஏற்படும் போக்கினை அதிகரிக்கலாம். எனவே, இரவு தூங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன் காஃபின் கலந்த பானங்களைத் தவிர்ப்பது நல்லது. அத்துடன், அட்ரேல் மற்றும் ரிடாலின் போன்ற சில குறிப்பிட்ட மருந்துகளின் பக்க விளைவுகளாலும் இது நிகழலாம். விரைவாகத் தூங்கச் செல்லும்போது உடல் தளர்ந்து போகும் வேளையில், மூளை அதைத் தவறுதலாக விழுவதாகக் கருதி எழுப்ப முயற்சிக்கிறது, அதன் விளைவாக இந்த உதறல் உணரப்படுகிறது என்று விஞ்ஞானிகள் மேலும் விளக்குகின்றனர்.