தீபு தாஸ் கொலை: இந்தியா கொடுத்த அழுத்தம்! குடும்பத்திற்கு வீடு மற்றும் நிதியுதவி வழங்கும் யூனுஸ் அரசு

வங்கதேசத்தின் மைமன்சிங்கில் கொடூரமாகக் கொல்லப்பட்ட ஆடைத் தொழிற்சாலை தொழிலாளி தீபு சந்திர தாஸின் குடும்பத்திற்கு, இடைக்கால அரசு தற்போது நிதியுதவி மற்றும் புதிய வீடு கட்டித்தர முடிவு செய்துள்ளது. இந்த விவகாரத்தில் இந்திய வெளியுறவு அமைச்சகம் அழுத்தம் கொடுத்ததைத் தொடர்ந்து, தலைமை ஆலோசகர் முகமது யூனுஸின் அறிவுறுத்தலின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
நிதியுதவி விவரங்கள்:
தீபு தாஸ் குடும்பத்தின் ஒரே வருமான ஆதாரமாக இருந்ததைக் கருத்தில் கொண்டு, அவர்களின் மறுவாழ்வுக்காகப் பின்வரும் உதவிகள் அறிவிக்கப்பட்டுள்ளன:
- புதிய வீடு: தேசிய வீட்டுவசதி ஆணையத்தின் மூலம் ரூ. 25 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டித்தரப்படும்.
- ரொக்க உதவி: தீபுவின் தந்தை மற்றும் மனைவிக்கு தலா ரூ. 10 லட்சம் நிதியுதவி வழங்கப்படும்.
- குழந்தையின் எதிர்காலம்: அவரது குழந்தையின் எதிர்கால பாதுகாப்பிற்காக ரூ. 5 லட்சம் நிரந்தர வைப்புத்தொகை (FDR) செய்யப்படும்.
இந்த உதவிகள் அனைத்தும் மைமன்சிங் மாவட்டத்தின் தாரகண்டா உபசிலா நிர்வாகத்தின் மேற்பார்வையில் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசின் கருத்து:
இந்த விவகாரம் குறித்து வங்கதேச கல்வி ஆலோசகர் டாக்டர் சி.ஆர். அப்ரார் கூறுகையில், “தீபு தாஸின் கொலை ஒரு கொடூரமான குற்றம், இதற்குச் சமூகத்தில் இடமில்லை. அவரது குடும்பத்திற்கு அரசு செய்யும் இந்த உதவி, ஒரு உயிரின் விலைக்கு ஈடாகாது. சட்டத்தை யாரும் கையில் எடுக்கக் கூடாது, நிச்சயமாக நீதி நிலைநாட்டப்படும்,” என்று தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 18-ம் தேதி, மதம் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கூறி தீபு தாஸ் அடித்துக் கொல்லப்பட்டு, எரிக்கப்பட்டார். இந்தச் சம்பவத்திற்கு எதிராக இந்தியாவிலும் வங்கதேசத்திலும் ஹிந்து அமைப்புகள் கடும் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.