திருமண மேடையிலிருந்து ஓடிய மாப்பிள்ளை விருந்தினராக வந்த நபர் மணமகனை மாறி கரம் பிடித்த நெகிழ்ச்சி சம்பவம்

கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டத்தில் சினிமா பாணியில் ஒரு சுவாரஸ்யமான திருமணம் நடந்துள்ளது. நவீன் மற்றும் சிந்து ஆகியோருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்த நிலையில், திருமணத்தன்று காலையில் தனது காதலியின் மிரட்டலுக்கு பயந்து மணமகன் நவீன் மண்டபத்தை விட்டு ஓட்டம் பிடித்தார். இதனால் மணப்பெண் வீட்டார் செய்வதறியாது திகைத்து நின்றனர். ஒரு கட்டத்தில் மணப்பெண் சிந்து கண்ணீர் விட்டு அழுதது அங்கிருந்தோரை சோகத்தில் ஆழ்த்தியது.
இந்த இக்கட்டான நிலையில், திருமணத்திற்கு விருந்தினராக வந்திருந்த சந்திரப்பா என்பவர் மணமகளை திருமணம் செய்து கொள்ள முன்வந்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார். போக்குவரத்து கழகத்தில் நடத்துனராக பணிபுரியும் சந்திரப்பாவின் இந்த முடிவுக்கு இரு வீட்டாரும் சம்மதம் தெரிவித்தனர். இறுதியில் விருந்தினராக வந்தவர் மணமகனாக மாறி சிந்துவின் கரம் பிடித்தார். ஒரு குடும்பத்தின் மானத்தை காப்பாற்றிய சந்திரப்பாவின் இந்த செயலை சமூக வலைதளங்களில் பலரும் பாராட்டி வருகின்றனர்.