திருமணத்திற்கு முன்பே தோழியை கடத்திச் சென்ற தோழி திருமண வீட்டில் பரபரப்பு

செய்தி பிரிவு : பஞ்சாப் மாநிலம் தரண் தரண் மாவட்டத்தில் நடைபெறவிருந்த திருமணத்திற்கு சில நாட்களுக்கு முன்பு, மணப்பெண்ணை அவரது தோழியே அழைத்துக்கொண்டு தலைமறைவான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜனவரி 14-ஆம் தேதி திருமணம் நடக்கவிருந்த நிலையில், இந்த சம்பவத்தால் மாப்பிள்ளை வீட்டார் திருமணத்தை நிறுத்திவிட்டனர். குற்றம் சாட்டப்பட்ட தோழி நீண்ட காலமாக மணப்பெண்ணுடன் பழகி வந்ததாகவும், இந்த திருமணத்தை நடத்த விடமாட்டேன் என மணப்பெண்ணின் சகோதரனை மிரட்டி வந்ததாகவும் கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணையில், பள்ளி பருவத்திலிருந்தே நெருக்கமாக இருந்த இவ்விரு தோழிகளும் ஒருவரையொருவர் நேசித்ததும், ஒன்றாக வாழவே வீட்டை விட்டு வெளியேறியதும் தெரியவந்துள்ளது. இது குறித்து வழக்குப்பதிவு செய்துள்ள நகர காவல் ஆய்வாளர் அம்ரிக் சிங், அவர்களின் இருப்பிடத்தை செல்போன் சிக்னல் மூலம் தேடி வருவதாகத் தெரிவித்தார். திருமணப் பத்திரிக்கை வழங்கப்பட்ட நிலையில் நடந்த இந்த விசித்திரமான காதல் விவகாரம் அப்பகுதியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.