தமிழக சட்டமன்ற தேர்தல் தேதியை அதிரடியாக அறிவித்தது தேர்தல் ஆணையம்

தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களுக்கான சட்டமன்ற தேர்தல் தேதியை தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வெளியிட்டார். தமிழகத்தில் ஏப்ரல் 23 அன்று ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று, மே 4 ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும். வேட்புமனு தாக்கல் மார்ச் 30 இல் தொடங்கி ஏப்ரல் 6 வரை நடைபெறும். ஏப்ரல் 7 அன்று மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, ஏப்ரல் 9 வேட்புமனுக்களை திரும்பப் பெற கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஐந்து மாநிலங்களில் உள்ள 824 தொகுதிகளில் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இந்த தேர்தலுக்காக 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு, 25 லட்சம் பணியாளர்கள் மற்றும் 8.5 லட்சம் பாதுகாப்பு வீரர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதையடுத்து நடத்தை விதிகள் உடனடியாக அமலுக்கு வந்துள்ளன. ஜனநாயக திருவிழாவை அமைதியாக நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.