தஞ்சையில் மத நல்லிணக்க இப்தார் விழா சமையல் எரிவாயு தட்டுப்பாடு விரைவில் சீராகும் என மேயர் உறுதி

தஞ்சை மாவட்ட வணிகர் சங்க கூட்டமைப்பு சார்பில் நடைபெற்ற மத நல்லிணக்க இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றார். அப்போது பேசிய அவர், தமிழ்நாடு எப்போதும் மதச்சார்பற்ற மற்றும் பாதுகாப்பான மாநிலமாக விளங்குவதாகப் பெருமிதம் தெரிவித்தார். மேலும், தற்போது நிலவி வரும் சிலிண்டர் தட்டுப்பாடு குறித்து முதல்வர் உரிய நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், இன்னும் ஒரு வாரத்திற்குள் இப்பிரச்சினை முழுமையாகத் தீர்க்கப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.
இவ்விழாவில் தொழிலதிபர் யாசர் அராபத்திற்கு மத நல்லிணக்க விருது வழங்கப்பட்டது. சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக மின்சார அடுப்புகளைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு, கூடுதல் மின் பயன்பாட்டிற்கு யூனிட்டிற்கு இரண்டு ரூபாய் மானியம் வழங்க அரசு முன்வந்துள்ளது. இந்தச் சலுகைக்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு வணிகர் சங்கத்தினர் நெஞ்சார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டனர். இந்நிகழ்வில் பல்வேறு சங்க நிர்வாகிகள் மற்றும் முக்கியப் பிரமுகர்கள் கலந்துகொண்டு சகோதரத்துவத்தைப் போற்றினர்.