டிரம்ப்பை சந்திக்க ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் முனீர் 30 நிமிடங்கள் காத்திருப்பு! வெள்ளை மாளிகை சந்திப்பின் பின்னணி என்ன?

பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் மற்றும் இராணுவத் தளபதி ஆசிம் முனீர் ஆகியோர் வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பை சந்தித்தனர். 2019 க்குப் பிறகு ஒரு பாகிஸ்தான் பிரதமருடன் டிரம்ப் நடத்தும் முதல் சந்திப்பு இது என்பதால், பஹல்காம் தாக்குதல் பதற்றம் மற்றும் அமெரிக்கா-இந்தியா வரிக் குழப்பங்களுக்கு மத்தியில் இச்சந்திப்பு முக்கியத்துவம் பெறுகிறது. இருதரப்பு உறவுகள், வர்த்தகம், பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகள் குறித்து மூடிய கதவுகளுக்குப் பின்னால் விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எனினும், இந்த உயர்மட்ட சந்திப்பின் கால அட்டவணை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. உள்ளூர் நேரப்படி மாலை 4:30 மணிக்கு சந்திப்பு தொடங்குவதாக இருந்த நிலையில், நிர்வாகப் பணிகளைக் காரணம் காட்டி ஷாபாஸ் மற்றும் முனீர் ஆகியோரை டிரம்ப் சுமார் 30 நிமிடங்கள் காத்திருக்க வைத்தார். சந்திப்பிற்குப் பிறகு, பாகிஸ்தான் தூதுக்குழு மாலை 6:18 மணிக்கு வெள்ளை மாளிகையிலிருந்து புறப்பட்டது. சந்திப்புக்கு முன், டிரம்ப் ஷெரீப்பை “சிறந்த தலைவர்” என்றும், முனீரை “மிகச் சிறந்த நபர்” என்றும் பாராட்டினார். வெள்ளை மாளிகை சந்திப்பு குறித்த விரிவான தகவல்களை வெளியிடாத நிலையில், இந்த திடீர் இரகசிய சந்திப்பு குறித்த ஊகங்கள் தீவிரமடைந்துள்ளன.