சோனம் வாங்சுக் ‘இரண்டாம் காந்தியா’? உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடும் எதிர்ப்பு!

லடாக் சமூக ஆர்வலர் சோனம் வாங்சுக்கை மகாத்மா காந்தியுடன் ஒப்பிடுவது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையின் போது, நீதிமன்றம் காந்தியின் அகிம்சை கொள்கைகளை குறிப்பிட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, எக்காரணம் கொண்டும் வாங்சுக்கை தேசப்பிதாவுடன் ஒப்பிட்டு பெருமைப்படுத்தக் கூடாது என்று வாதிட்டார். மேலும், வாங்சுக்கின் செயல்பாடுகளை ‘தேசவிரோதமானது’ என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் குறிப்பிட்டார்.
மறுபுறம், ஒரு கருத்தின் ஒரு பகுதியை மட்டும் பார்க்காமல் முழுமையான பின்னணியையும் ஆராய வேண்டும் என்று நீதிமன்றம் தெரிவித்தது. வன்முறைக்கு எதிராகவே தான் செயல்படுவதாக வாங்சுக் கூறினாலும், அவரது போராட்டம் பொது ஒழுங்கிற்கு இடையூறு விளைவிப்பதாக மத்திய அரசு குற்றம் சாட்டியுள்ளது. அதேபோல், அவரது உடல்நிலை குறித்த தகவல்கள் சமூக வலைதளங்களால் உருவாக்கப்பட்ட பிரச்சாரம் என்று கூறி நிராகரித்த அரசு, தற்போது அவரை விடுதலை செய்ய முடியாது என்றும் திட்டவட்டமாகத் தெரிவித்தது.