செல்போன் டார்ச் வெளிச்சத்தில் அறுவை சிகிச்சை 12 ஆண்டுகளுக்குப் பின் மருத்துவர் மீது வழக்கு

மும்பையின் கோவாண்டி பகுதியில் மின்சாரம் இல்லாத நேரத்தில் செல்போன் டார்ச் வெளிச்சத்தைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்ததால் வாலிபர் உயிரிழந்த விவகாரத்தில், 12 ஆண்டுகளுக்குப் பிறகு சம்பந்தப்பட்ட மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு விபத்தில் காயமடைந்த 23 வயது சல்மான் பாபர் ஷா என்பவருக்கு முறையான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும், இதன் காரணமாகவே அவர் செப்டிசீமியாவால் உயிரிழந்தார் என்றும் அவரது தாயார் நசீம் பானு குற்றம் சாட்டியுள்ளார்.
தனது மகனின் மரணத்திற்கு நீதி கேட்டு நசீம் பானு கடந்த பத்து ஆண்டுகளுக்கும் மேலாக தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் உயர் நீதிமன்றம் வாயிலாகப் போராடி வந்தார். இந்த நீண்ட சட்டப் போராட்டத்தின் பலனாக தற்போது காவல்துறை அந்த மருத்துவர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளது. மருத்துவத்துறையில் நிலவும் இத்தகைய பொறுப்பற்ற தன்மையை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ள இந்த நடவடிக்கை, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.