செங்கோட்டை மற்றும் டெல்லி சட்டசபைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த காலிஸ்தான் குழு

டெல்லி சட்டசபை, செங்கோட்டை மற்றும் இரண்டு பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. காலிஸ்தான் குழுவின் பெயரில் வந்த மின்னஞ்சலில் இந்த இடங்களை தகர்க்கப்போவதாக மிரட்டல் விடுக்கப்பட்டது. இதனையடுத்து பாதுகாப்புப் படையினர் மற்றும் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். இருப்பினும், சோதனையின் முடிவில் சந்தேகத்திற்குரிய பொருட்கள் ஏதும் கண்டறியப்படவில்லை என்று டெல்லி காவல்துறை தெரிவித்தது.
கடந்த ஒன்றரை ஆண்டுகளில் டெல்லியில் உள்ள கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு 50-க்கும் மேற்பட்ட முறை இதுபோன்ற மிரட்டல்கள் வந்துள்ளன. திங்கள்கிழமை காலை ஆர்மி பப்ளிக் பள்ளி மற்றும் விமானப்படை பால் பாரதி பள்ளிக்கும் மிரட்டல் வந்ததையடுத்து பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மின்னஞ்சலின் பின்னணியில் உள்ளவர்களைக் கண்டறிய சைபர் க்ரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.