சிலிண்டர் தட்டுப்பாடு குறித்த வதந்திகளைப் பரப்பினால் கடும் நடவடிக்கை

நாட்டில் சமையல் எரிவாயு தட்டுப்பாடு நிலவுவதாகப் பரவும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பழைய காட்சிகளைத் திரும்பத் திரும்ப ஒளிபரப்பி மக்களிடையே தேவையற்ற பீதியை உருவாக்க வேண்டாம் என ஊடகங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. செய்திகளில் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்தக் காலமும் தேதியும் குறிப்பிடப்பட வேண்டும்.
பொதுமக்கள் அச்சத்தில் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டாம் எனவும், விநியோகம் தடையின்றி நடப்பதை உறுதி செய்ய மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. வதந்தி பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படுவதோடு, பதுக்கலைத் தவிர்க்க மாவட்ட அளவிலான கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்களில் சரிபார்க்கப்பட்ட தகவல்களை மட்டுமே பகிருமாறு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது.