சின்னசாமி மைதானத்தில் 11 இருக்கைகள் காலியாக விடப்படுமா ஆர்சிபி நிர்வாகத்தின் உருக்கமான முடிவு

கடந்த 2025 ஐபிஎல் வெற்றிக் கொண்டாட்டத்தின் போது சின்னசாமி மைதானத்திற்கு வெளியே ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 11 ரசிகர்கள் உயிரிழந்தனர். அவர்களின் நினைவைப் போற்றும் வகையில், இந்த 2026 ஐபிஎல் தொடரில் ஆர்சிபி விளையாடும் போட்டிகளின் போது மைதானத்தில் 11 இருக்கைகளை நிரந்தரமாக காலியாக வைப்பது குறித்து நிர்வாகம் ஆலோசித்து வருகிறது. பல மாதங்களுக்குப் பிறகு மீண்டும் பெங்களூரு மைதானத்தில் போட்டிகள் நடைபெறவுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து ஆர்சிபி சிஇஓ ராஜேஷ் மேனன் கூறுகையில், வீரர்கள் பயிற்சியின் போது 11-ஆம் எண் கொண்ட ஜெர்சியையும், போட்டியின் போது கறுப்பு நிறப் பட்டையையும் அணிந்து அஞ்சலி செலுத்துவார்கள் என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் நினைவாக மைதானத்தில் நினைவுப் பலகையும் திறந்து வைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு குறைபாடுகள் குறித்த விமர்சனங்களுக்குப் பிறகு, தற்போது கூடுதல் கட்டுப்பாடுகளுடன் சின்னசாமி மைதானத்தில் 5 ஐபிஎல் போட்டிகள் நடத்த கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.