சிந்து நதி நீர் ஒப்பந்தம் நிறுத்தம் எதிரொலி சந்திரபாகா ஆற்றில் புதிய மின் திட்டத்திற்கு இந்தியா அதிரடி ஒப்புதல்

பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து பாகிஸ்தானுடனான சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்த நிலையில் இப்போது சந்திரபாகா ஆற்றில் புதிய நீர்மின் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் கிஷ்த்வாரில் சுமார் 3,277 கோடி ரூபாய் செலவில் 260 மெகாவாட் திறன் கொண்ட ‘துல்ஹஸ்தி நிலை-2’ திட்டத்தை செயல்படுத்த மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது. டிசம்பர் 19 அன்று நடைபெற்ற கூட்டத்தில் எடுக்கப்பட்ட இந்த முடிவு ஏற்கனவே செயல்பாட்டில் உள்ள 390 மெகாவாட் துல்ஹஸ்தி நிலை-1 திட்டத்தின் விரிவாக்கமாக அமையும்.
இந்த புதிய நீர்மின் திட்டமானது 1960 சிந்து நதி நீர் ஒப்பந்தத்தின் கீழ் இருக்கும் பாகிஸ்தானின் நலன்களுக்கு பெரும் சவாலாக மாறும் என கருதப்படுகிறது. சுமார் 60 ஹெக்டேர் பரப்பளவில் அமையவுள்ள இந்த திட்டத்தால் பாகிஸ்தானுக்கான நீர்வரத்து கட்டுப்படுத்தப்படும் அபாயம் உள்ளது. இதனால் அந்நாட்டில் வறட்சி அல்லது திடீர் வெள்ளம் போன்ற இயற்கை பேரிடர்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. எல்லையோர பயங்கரவாதத்திற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்தியாவின் இந்த வியூக நடவடிக்கை பாகிஸ்தானை சர்வதேச அளவில் மேலும் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது.