சமையல் எரிவாயு தட்டுப்பாட்டை நீக்க பாரசீக வளைகுடாவிலிருந்து விரைந்து வரும் பிரம்மாண்ட கப்பல்கள்

சமையல் எரிவாயு தட்டுப்பாடு குறித்த வதந்திகளால் உருவான பீதியைக் குறைக்க மத்திய அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. ‘சிவாலிக்’ மற்றும் ‘நந்த தேவி’ ஆகிய இரு கப்பல்கள் பெருமளவிலான எல்பிஜி சிலிண்டர்களுடன் மார்ச் 16-17 தேதிகளில் முந்த்ரா மற்றும் கண்ட்லா துறைமுகங்களை வந்தடைய உள்ளன. இந்த கப்பல்களிலிருந்து எரிவாயுவை இறக்குமதி செய்ய முன்னுரிமை அளிக்கப்படும் என்று பெட்ரோலிய அமைச்சகம் உறுதி அளித்துள்ளது.
சிலிண்டர் முன்பதிவில் முறைகேடுகளைத் தவிர்க்க புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இதன்படி நகர்ப்புறங்களில் 25 நாட்களுக்கும், கிராமப்புறங்களில் 45 நாட்களுக்கும் இடைவெளி இன்றி இரண்டாவது சிலிண்டரை பதிவு செய்ய முடியாது. நாட்டில் போதிய கையிருப்பு உள்ளதால் பொதுமக்கள் தேவையற்ற பதற்றமடையாமல் இணையவழியில் முன்பதிவு செய்யுமாறு அதிகாரிகள் கேட்டுக் கொண்டுள்ளனர்.