சபாநாயகர் பதவிக்கு ஆபத்தா 118 எம்.பி.க்களின் அதிரடி தீர்மானத்தால் இன்று நாடாளுமன்றத்தில் உச்சகட்ட பரபரப்பு

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாம் அமர்வு இன்று தொடங்கும் நிலையில், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவை பதவியிலிருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள தீர்மானம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் மற்றும் திமுக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த 118 எம்.பி.க்கள் ஓம் பிர்லா பாரபட்சமாகச் செயல்படுவதாகக் கூறி இந்த நோட்டீஸை அளித்துள்ளனர். 50 எம்.பி.க்களின் ஆதரவு தேவைப்படும் இந்தத் தீர்மானத்தின் மீதான விவாதம் மற்றும் வாக்கெடுப்பு இன்று நடைபெறவுள்ளதால் இருதரப்பும் தங்கள் எம்.பி.க்களுக்கு கொறடா உத்தரவு பிறப்பித்துள்ளன.
சர்வதேச விவகாரங்களைப் பொறுத்தவரை, மேற்காசியப் போர் சூழல் குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் இன்று அறிக்கை தாக்கல் செய்ய உள்ளார். இருப்பினும், ரஷ்ய எண்ணெய் கொள்முதல் மற்றும் ஈரான் விவகாரங்கள் குறித்து விரிவான விவாதம் நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பிடிவாதமாக உள்ளன. அதேசமயம், மேற்கு வங்கத் தேர்தல் நெருங்குவதால் அம்மாநில வாக்காளர் பட்டியல் விவகாரத்தை எழுப்பத் திரிணமூல் காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. இதனால் இந்த கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கும் எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடுமையான மோதல் போக்கை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.