சச்சினின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்ஸி இனி ஆயுஷ் வசம்! உலகக்கோப்பை நாயகனுக்கு ‘மாஸ்டர் பிளாஸ்டர்’ கொடுத்த ரகசிய அட்வைஸ்!

மும்பை: அண்மையில் நடந்து முடிந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலகக்கோப்பையை வென்று இந்தியாவிற்குப் பெருமை சேர்த்த கேப்டன் ஆயுஷ் மத்ரே, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.
இந்தச் சந்திப்பின் போது, சச்சின் தனது கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி டெஸ்ட் தொடரில் அணிந்திருந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஜெர்ஸியை ஆயுஷிற்கு பரிசாக வழங்கினார். இளவீரரான ஆயுஷை வெகுவாகப் பாராட்டிய சச்சின், “தொடர்ந்து கடினமாக உழைக்க வேண்டும், இலக்கில் இருந்து எப்போதும் பின்வாங்கக் கூடாது” என்ற முக்கியமான ஆலோசனையையும் வழங்கினார். இவர்களின் சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
உள்நாட்டு கிரிக்கெட்டில் ஜொலித்த ஆயுஷ், தற்போது உலகக்கோப்பையை வென்று இந்தியாவின் நம்பிக்கைக்குரிய நட்சத்திரமாக மாறியுள்ளார். சச்சின் வழங்கிய இந்த பொக்கிஷமான பரிசை வாழ்நாள் முழுவதும் போற்றிப் பாதுகாப்பேன் என அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். உலகக்கோப்பையின் தொடக்கத்தில் தடுமாறினாலும், நாக்-அவுட் சுற்றில் அபாரமாக விளையாடி அணிக்கு வெற்றியைத் தேடித்தந்தார் ஆயுஷ்.
அடுத்ததாக இந்திய சீனியர் அணியில் இடம்பிடிப்பதும், நாட்டிற்காக உலகக்கோப்பையை வென்று தருவதுமே தனது அடுத்த இலக்கு என்று ஆயுஷ் மத்ரே உறுதியுடன் தெரிவித்துள்ளார்.