கோலி-ரோஹித் எதிர்காலம் என்ன? பிசிசிஐயின் அவசர கூட்டத்தில் அதிரடி முடிவு

தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய அணி ஒயிட்வாஷ் ஆன நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) அணியின் எதிர்காலம் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கத் தயாராகி வருகிறது. 2026 டி20 உலகக் கோப்பை போன்ற முக்கியப் போட்டிகளுக்கு முன் அணியின் பிரச்சினைகளைத் தீர்க்க வாரியம் விரும்புகிறது. இதற்காக, வாரிய அதிகாரிகள், தலைமைப் பயிற்சியாளர் கவுதம் கம்பீர் மற்றும் தலைமைத் தேர்வாளர் அஜித் அகர்கர் ஆகியோர் புதன்கிழமை ராய்ப்பூரில் அவசரக் கூட்டத்தில் கலந்துகொள்ளவுள்ளனர். கூட்டத்தின் முக்கிய நோக்கம் அணியை மேம்படுத்துவதும், அணி நிர்வாகத்திற்கும் தேர்வுக்குழுவிற்கும் இடையேயான உறவை வலுப்படுத்துவதும் ஆகும்.
இந்த முக்கியக் கூட்டத்தில் நட்சத்திர வீரர்களான ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி ஆகியோரின் சர்வதேச கிரிக்கெட் எதிர்காலம் குறித்தும் விவாதிக்கப்படும் என பரபரப்பான தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரு அனுபவ வீரர்களும் தற்போது டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் இருந்து விலகி இருந்தாலும், ஒருநாள் போட்டிகளில் சிறப்பான ஃபார்மில் உள்ளனர். ஷுப்மன் கில் புதிய ஒருநாள் கேப்டனாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், 2027 ஒருநாள் உலகக் கோப்பை வரை இவர்கள் அணியில் நீடிப்பது குறித்து பிசிசிஐ முடிவெடுக்க உள்ளது.