கோயிலில் திருட நுழைந்தவர் தூங்கியதால் சிக்கினார்! விழித்தெழுந்த திருடனை பார்த்து கிராம மக்கள் அதிர்ச்சி

ஜார்க்கண்டின் தலைநகர் ராஞ்சியில் உள்ள பராசமாதா மா காளி மற்றும் சீத்தலா கோயிலில் திருட முயன்றபோது ஒரு வினோதமான சம்பவம் நடந்துள்ளது. வீர் நாயக் என்ற திருடன் நள்ளிரவில் கோயிலின் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து நன்கொடை பெட்டியில் இருந்து பணத்தையும், சீத்தலா தேவி சிலையில் இருந்த தங்கம் மற்றும் வெள்ளி நகைகளையும் திருடி ஒரு பையில் வைத்தான். திருடி முடித்து வெளியேற முயன்றபோது, அதிகப்படியான மது மற்றும் தூக்க மாத்திரையின் விளைவால், அவனால் வெளியேற முடியவில்லை, திருடிய பொருட்களுடன் கோயிலுக்குள்ளேயே ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.
மறுநாள் காலை, கோயிலின் கதவுகள் திறந்திருப்பதை கண்டு கிராம மக்கள் உள்ளே வந்து பார்த்தனர். அங்கிருந்த நபர் ஆழ்ந்த உறக்கத்தில் இருப்பதைக் கண்டு சந்தேகித்த கிராம மக்கள், அவரது பையைச் சோதித்தனர். பையில், கோயிலில் இருந்து திருடப்பட்ட பொருட்கள் மற்றும் பணம் இருப்பது உறுதியானது. உடனடியாக, கிராம மக்கள் பராசமாதா காவல் நிலைய பொறுப்பாளர் பாலேஸ்வர் ஓராவ் அவர்களுக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த போலீசார், உறங்கிக் கொண்டிருந்த திருடனை கைது செய்தனர். அவனிடமிருந்து திருடப்பட்ட நகைகள், பணம் மற்றும் டி-10 என்ற தூக்க மாத்திரைகள் மீட்கப்பட்டன. இச்சம்பவத்தை அப்பகுதி மக்கள் தாயின் அற்புதம் என்று கூறுகின்றனர்.