காசாவில் அமைதிப் பேச்சுவார்த்தை: ஆயுதங்கள் குறித்து விவாதிக்க ஹமாஸ் தயார்

இஸ்ரேலுடனான போர் நிறுத்த ஒப்பந்தத்தின் இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைக்கு முன்னதாக, ஹமாஸ் அமைப்பு ஆயுதங்களை ‘உறைய வைக்க’ (பயன்படுத்தாமல் வைக்க) அல்லது ‘சேமித்து வைக்க’ (பாதுகாப்பான இடத்தில் வைக்க) முன்மொழிவைப் பற்றி விவாதிக்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளது. ஹமாஸின் அரசியல் குழுவின் மூத்த உறுப்பினர் பஸ்ஸேம் நயிம், கத்தார் தலைநகர் தோஹாவில் செய்தி நிறுவனத்திடம் இந்த முக்கிய தகவலை உறுதிப்படுத்தினார். அமெரிக்காவின் மத்தியஸ்தத்துடன் நடைபெறும் இந்த ஒப்பந்தத்தில் உள்ள மிகவும் சிக்கலான பிரச்னைகளில் ஒன்றைத் தீர்க்க இந்த நடவடிக்கை உதவக்கூடும்.
அக்டோபர் 7, 2023 தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேல் மேற்கொண்ட இராணுவ நடவடிக்கையால் காசாவில் ஏற்பட்ட நீண்டகால மோதலை நிறுத்தி போர் நிறுத்தம் நடைமுறைக்கு வந்தது. இரண்டாவது கட்டத்தில், காசாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் விலகுவது, சர்வதேச பாதுகாப்புப் படை நிறுத்துவது மற்றும் ஹமாஸை நிராயுதபாணியாக்குவது போன்ற கடினமான பிரச்னைகள் விவாதத்தில் உள்ளன. மோதல் மீண்டும் தலைதூக்குவதைத் தவிர்க்க ஒரு விரிவான அணுகுமுறைக்கு ஹமாஸ் தயாராக இருப்பதாக நயிம் தெரிவித்துள்ளார்.