கரூர் ரயில் விபத்திற்கும் எங்களுக்கும் சம்பந்தமில்லை என சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் அதிரடி விளக்கம்

கரூர் அருகே தனியார் தொழிற்சாலைக்கு சொந்தமான ரயில் பாதையில் கல்லூரி பேருந்து மோதி விபத்துக்குள்ளானதற்கும், ரயில்வே நிர்வாகத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை என சேலம் கோட்ட மேலாளர் பன்னா லால் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். 1969-ல் உருவாக்கப்பட்ட இந்தத் தனிப்பட்ட வழித்தடத்தின் முழுப் பொறுப்பும் அந்தத் தனியார் நிறுவனத்தையே சாரும் என்றும், விபத்து குறித்து மாநில காவல்துறையே உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் விளக்கமளித்தார்.
தனியார் சிமெண்ட் ஆலை இரயில் மோதியதில் 24 மாணவர்கள் காயமடைந்த நிலையில், இந்திய ரயில்வே தனது எல்லைக்குட்பட்ட பகுதிகளில் ஆளில்லா ரயில்வே கேட்டுகளை முற்றிலுமாக அகற்றிவிட்டதாக அவர் கூறினார். மேலும், அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ் சேலம் கோட்டத்தில் உள்ள ரயில் நிலையங்கள் நவீனப்படுத்தப்பட்டு வருவதாகவும், பயணிகளின் பாதுகாப்பிற்காக டிஜிட்டல் இன்டர்லாக் சிஸ்டம் போன்ற மேம்பட்ட பாதுகாப்பு நடைமுறைகள் பின்பற்றப்படுவதாகவும் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.