கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் உயிரிழப்பு; பீதியில் உறைந்த மாணவர்கள்!

கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் (Tumbler Ridge) நகரில் அரங்கேறியுள்ள பயங்கர துப்பாக்கிச் சூடு சம்பவம் உலகையே உலுக்கியுள்ளது. ஒரு மேல்நிலைப் பள்ளி மற்றும் அருகில் உள்ள ஒரு வீடு என இரண்டு இடங்களில் நடத்தப்பட்ட இந்தத் தாக்குதலில், துப்பாக்கிச்சூடு நடத்திய பெண் உட்பட மொத்தம் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 25 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர்.
பள்ளியில் நடந்த கோரத் தாண்டவம்
வான்கூவரில் இருந்து சுமார் 415 மைல் தொலைவில் உள்ள டம்பிளர் ரிட்ஜ் மேல்நிலைப் பள்ளியில், உள்ளூர் நேரப்படி மதியம் 1:20 மணியளவில் இந்தத் தாக்குதல் தொடங்கியுள்ளது. பள்ளி வளாகத்திற்குள் நுழைந்த மர்ம நபர் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுடத் தொடங்கினார். இதில் சம்பவ இடத்திலேயே 6 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் மேலும் ஒருவர் உயிரிழந்தார்.
தாக்குதல் குறித்து தகவல் கிடைத்த அடுத்த இரண்டு நிமிடங்களிலேயே ராயல் கனடியன் மவுண்டட் போலீஸ் (RCMP) சம்பவ இடத்திற்கு விரைந்தனர். துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் “பழுப்பு நிற முடி கொண்ட ஒரு பெண்” என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், மக்கள் பாதுகாப்பான இடங்களில் இருக்குமாறு மொபைல் எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர், அந்தப் பெண் தன்னைத்தானே சுட்டுக்கொண்டு தற்கொலை செய்துகொண்டதாகத் தெரிகிறது. அவரது உடல் பள்ளி வளாகத்திலேயே மீட்கப்பட்டது.
“பெஞ்சுகளை அடுக்கி கதவை மூடினோம்” – மாணவர்களின் பகீர் வாக்குமூலம்
துப்பாக்கிச் சூடு நடந்தபோது பள்ளியில் இருந்த 12-ம் வகுப்பு மாணவர் டேரியன் குவிஸ்ட் அந்த பயங்கர நிமிடங்களை விவரித்துள்ளார். “மதியம் 1:30 மணியளவில் அலாரம் ஒலித்தது. பயத்தில் என்ன செய்வதென்று தெரியாமல், வகுப்பறை கதவுகளைப் பூட்டிவிட்டு, அதற்குப் பின்னால் பெஞ்சுகளை அடுக்கி வைத்தோம். உயிருக்குப் பயந்து நடுங்கிக்கொண்டிருந்தோம்” என்று அவர் கூறினார்.
உள்ளூர் கவுன்சிலர் கிறிஸ் நோர்பெரி கூறுகையில், “உங்கள் அன்புக்குரியவர்கள் ஆபத்தில் இருக்கும்போது ஏற்படும் அந்த பயத்தை வார்த்தைகளால் விவரிக்க முடியாது” என உருக்கமாகத் தெரிவித்தார். அவரது மனைவியும் அதே பள்ளியில் பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடரும் விசாரணை
பள்ளிக்கு அருகில் உள்ள ஒரு வீட்டிலும் இரண்டு சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு சம்பவங்களுக்கும் தொடர்பு இருப்பதாகக் கருதும் காவல்துறையினர், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாக்குதல் நடத்திய பெண்ணிற்கும் அந்தப் பள்ளிக்கும் ஏதேனும் தொடர்பு இருந்ததா என்பது குறித்து இன்னும் தெளிவான தகவல் கிடைக்கவில்லை.
கனடா பிரதமர் மார்க் கார்னி இந்தச் சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். “டம்பிளர் ரிட்ஜில் நடந்த இந்த கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் தனது எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்டுள்ளார்.
துப்பாக்கிச் கலாச்சாரம் கட்டுப்படுத்தப்பட்ட நாடாகக் கருதப்படும் கனடாவில், ஒரு பெண் இத்தகைய தாக்குதலில் ஈடுபட்டது பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.