கனடா பள்ளியில் துப்பாக்கிச் சூடு: 10 பேர் பலி, நாடு முழுவதும் அதிர்ச்சி!

டம்பிளர் ரிட்ஜ்: உங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பிவிட்டு நிம்மதியாக இருக்க முடியுமா? கனடாவின் டம்பிளர் ரிட்ஜ் பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் புதன்கிழமை மதியம் நடந்த கொடூரச் சம்பவம், பொதுமக்களிடையே பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.
மதியம் 1:20 மணியளவில் வகுப்புகள் நடந்து கொண்டிருந்தபோது, மர்ம நபர் ஒருவர் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர்; 25 பேர் படுகாயமடைந்துள்ளனர். இந்தச் சம்பவம் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்த பெரும் கேள்விக்குறியை எழுப்பியுள்ளது.
துப்பாக்கிச் சூடு நடத்திய நபர் காவல்துறையினரால் சுட்டுக் கொல்லப்பட்ட போதிலும், அப்பகுதியில் இன்னும் பதற்றம் தணியவில்லை. தற்போது அந்தப் பகுதியை முழுமையாக சுற்றி வளைத்துள்ள போலீசார், பொதுமக்கள் வீட்டிற்குள்ளேயே இருக்குமாறு அறிவுறுத்தியுள்ளனர். இந்தத் தாக்குதலுக்குப் பின்னால் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. காயமடைந்தவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.