ஓட்டுநர் உரிமம் மட்டும் போதாது அனுபவமும் பயிற்சியும் மிக அவசியம் என உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

ஓட்டுநர் உரிமம் என்பது வெறும் காகித ஆவணம் மட்டுமல்ல அது ஒருவரின் அனுபவம் மற்றும் பயிற்சியையும் குறிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தெலங்கானா உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்த நீதிமன்றம் வாகனம் ஓட்டுவதற்கு நடைமுறை அனுபவம் மற்றும் தொடர்ச்சியான பயிற்சி மிக அவசியம் என்று கூறியுள்ளது. குறிப்பாக காவல்துறை மற்றும் பேரிடர் மீட்புப் பணிகளில் ஈடுபடும் ஓட்டுநர்களுக்கு இந்த திறன் மிகவும் முக்கியமானது என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
தெலங்கானா காவல்துறை போக்குவரத்து மற்றும் தீயணைப்புத் துறையில் உள்ள 325 ஓட்டுநர் பணியிடங்களுக்கான தகுதியை நிர்ணயிக்கும் வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இரண்டு ஆண்டுகால அனுபவம் மற்றும் செல்லுபடியாகும் உரிமம் தொடர்பான விதிமுறைகளை உறுதிப்படுத்திய உச்ச நீதிமன்றம் அடுத்த மூன்று மாதங்களுக்குள் இந்த ஆள்சேர்ப்பு செயல்முறையை முடிக்க உத்தரவிட்டுள்ளது. அவசர கால பணிகளில் சிறிய தவறும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் ஓட்டுநர் தகுதியில் சமரசம் செய்ய முடியாது என்று நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.