ஏலியன்கள் பற்றிய மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் ட்ரம்ப் அமெரிக்க ரகசிய கோப்புகள் வெளியாகின்றன

வேற்று கிரக வாசிகள் மற்றும் பறக்கும் தட்டுகள் குறித்த மர்மங்களை உடைக்க அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். இது தொடர்பான அனைத்து ரகசிய கோப்புகளையும் கண்டறிந்து பொதுமக்களுக்கு வெளியிடுமாறு பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத்திற்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக முன்னாள் அதிபர் பராக் ஒபாமா ஏலியன்கள் இருப்பது உண்மை என கருத்து தெரிவித்திருந்த நிலையில், அவர் ரகசிய தகவல்களை கசியவிட்டதாக ட்ரம்ப் குற்றம் சாட்டியுள்ளார்.
ட்ரூத் சோஷியல் தளத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்ட ட்ரம்ப், மக்களின் அதிகப்படியான ஆர்வம் காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக கூறினார். குடியரசுக் கட்சி மற்றும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இதனை வரவேற்றாலும், எப்ஸ்டீன் கோப்புகள் தொடர்பான சர்ச்சையில் இருந்து கவனத்தை திசைதிருப்பவே ட்ரம்ப் இத்தகைய முயற்சியில் ஈடுபடுவதாக அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இந்த கோப்புகள் விண்வெளி மர்மங்களுக்கு விடையளிக்குமா என்பது இனிமேல் தான் தெரியும்.