ஏப்ரல் 1 முதல் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலை உயர்வு புதிய கட்டண விவரம் இதோ

தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (NHAI) வணிகமற்ற வாகனங்களுக்கான ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸ் விலையை உயர்த்தியுள்ளது. வரும் ஏப்ரல் 1, 2026 முதல் அமலுக்கு வரும் இந்த மாற்றத்தின்படி, பாஸ் விலை 3000 ரூபாயிலிருந்து 3075 ரூபாயாக உயர்கிறது. மத்திய சாலைப் போக்குவரத்து அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி, 2026-27 நிதியாண்டிற்கான இந்த 75 ரூபாய் விலையேற்றம் குறித்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வாகன உரிமையாளர்கள் இந்த டிஜிட்டல் பாஸை NHAI இணையதளம் மூலம் நேரடியாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இந்த வருடாந்திர பாஸ் ஒரு ஆண்டு காலாவதி அல்லது அதிகபட்சம் 200 பயணங்கள் வரை செல்லுபடியாகும். 200 பயணங்கள் முடிந்துவிட்டால், காலாவதி தேதிக்கு முன்பே மீண்டும் புதுப்பிக்க வேண்டும். தற்போது நாட்டில் உள்ள 11.86 கோடி ஃபாஸ்டேக் கணக்குகளில் 5.9 கோடி பயன்பாட்டில் உள்ளன. இந்தச் சலுகை குறிப்பிட்ட 1150 சுங்கச்சாவடிகளில் மட்டுமே பொருந்தும் என்பதால், மற்ற இடங்களில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.