ஈரானை விட்டு உடனடியாக வெளியேற இந்திய தூதரகம் அதிரடி உத்தரவு

ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே போர் பதற்றம் அதிகரித்து வரும் சூழலில், அங்குள்ள இந்தியர்கள் அனைவரும் உடனடியாக ஈரானை விட்டு வெளியேறுமாறு இந்திய தூதரகம் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது. மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் வணிகர்கள் என அனைவரும் வணிக ரீதியிலான விமானங்கள் மூலம் விரைவாக தாயகம் திரும்புமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். ஜனவரி 5 ஆம் தேதி வெளியிடப்பட்ட பாதுகாப்பு ஆலோசனையின் தொடர்ச்சியாக தற்போதைய சூழலைக் கருத்தில் கொண்டு இந்த முக்கிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியர்கள் போராட்டக் களங்களுக்குச் செல்வதைத் தவிர்க்குமாறும், பாஸ்போர்ட் உள்ளிட்ட ஆவணங்களைச் தயார் நிலையில் வைத்திருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். அவசர கால உதவிக்காகத் தூதரகம் பிரத்யேக உதவி எண்கள் மற்றும் மின்னஞ்சல் முகவரியை வழங்கியுள்ளது. அமெரிக்க அதிபரின் எச்சரிக்கை மற்றும் ஈரானின் உள்நாட்டுப் போராட்டங்களால் மத்திய கிழக்கில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள நிலையில், இந்தியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.