ஈரானின் அதிரடி நடவடிக்கையால் திணறும் அமெரிக்கா உதவியை நாடி சீனாவிடம் செல்கிறார் டிரம்ப்

மத்திய கிழக்கில் அதிகரித்து வரும் பதற்றத்தால் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையான ராஜதந்திர நெருக்கடியை சந்தித்து வருகிறார். போர் முடிவுக்கு வரும் என்று டிரம்ப் குறிப்பிட்ட போதிலும், போர் குறித்த முடிவை தாங்களே எடுப்போம் என ஈரான் எச்சரித்துள்ளது. அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் முக்கிய நீர்வழியான ஹார்முஸ் ஜலசந்தியை ஈரான் மூடியுள்ளது டிரம்பிற்கு பெரும் கவலையை அளித்துள்ளது. தற்போதைய நிலையில் அமெரிக்க கப்பல்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சீனாவிற்கு மட்டும் இந்த பாதை திறக்கப்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்க்க டிரம்ப் இப்போது சீனாவின் உதவியை நாடியுள்ளார். இம்மாத இறுதியில் சீன அதிபர் ஷி ஜின்பிங்குடன் ஒரு உயர்மட்ட சந்திப்பு திட்டமிடப்பட்டுள்ளது. தனது செல்வாக்கைப் பயன்படுத்தி ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறக்க ஈரானை சீனா சம்மதிக்க வைக்கும் என்று டிரம்ப் நம்புகிறார். சீனா தனது கச்சா எண்ணெய் தேவையில் 90 சதவீதத்தை இந்த பாதை வழியாகவே பெறுவதால், பெய்ஜிங்கின் தலையீடு சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.