இன்ஸ்டாகிராம் தனிப்பட்ட அரட்டைகளின் பாதுகாப்பில் மெட்டா அதிரடி மாற்றம்

இன்ஸ்டாகிராம் தளத்தில் தனிப்பட்ட அரட்டைகள் மற்றும் அழைப்புகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்பட்டு வந்த ‘எண்ட்-டு-எண்ட் என்க்ரிப்ஷன்’ சேவையை மே மாதம் 8-ஆம் தேதி முதல் நிறுத்த மெட்டா நிறுவனம் முடிவெடுத்துள்ளது. குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் சட்டவிரோத உள்ளடக்கங்களைக் கண்டறியும் நோக்கில் இந்த பாதுகாப்பு அம்சம் நீக்கப்படுகிறது. இதனால் பயனர்களின் தனிப்பட்ட தகவல்களின் ரகசியத்தன்மை மற்றும் பாதுகாப்பு குறித்த கேள்விகளும் கவலைகளும் எழுந்துள்ளன.
தீங்கு விளைவிக்கும் நடவடிக்கைகளை அரட்டை ஸ்கேனிங் மூலம் எளிதாகக் கண்டறிய முடியும் என்று மெட்டா தெரிவித்துள்ளது. இந்த மாற்றத்தால் பாதிக்கப்படும் பயனர்களுக்கு செயலி மூலமாகவே எச்சரிக்கை அறிவிப்புகள் வழங்கப்படும். முக்கியமான உரையாடல்கள் மற்றும் புகைப்படங்களை முன்னெச்சரிக்கையாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். இதே போன்ற மாற்றம் பேஸ்புக் மெசஞ்சர் தளத்திலும் கொண்டு வரப்படுமா என்பது குறித்து இதுவரை முறையான அறிவிப்பு வெளியாகவில்லை.