இந்திய ராணுவ தளபதி பெயரில் பரப்பப்பட்ட பாகிஸ்தானின் போலி வீடியோ குறித்த உண்மையை உடைத்தது பிஐபி

இந்திய ராணுவ தளபதி ஜெனரல் உபேந்திர திவேதியின் பெயரில் சமூக வலைதளங்களில் பரப்பப்பட்ட வீடியோ முற்றிலும் போலியானது என பிஐபி உண்மை கண்டறியும் குழு உறுதி செய்துள்ளது. சர்வதேச கடல் பகுதியில் உள்ள ஈரானிய கப்பல் குறித்து ஏஐ தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட இந்த டீப்ஃபேக் வீடியோவை சில பாகிஸ்தான் கணக்குகள் விஷமத்தனமாக பரப்பி வந்தன. இந்தியாவிற்கு எதிராக திட்டமிட்டு பரப்பப்பட்ட இந்த ஆதாரமற்ற பிரச்சாரத்தின் பின்னணியில் உள்ள சதியை மத்திய அரசு தற்போது அம்பலப்படுத்தியுள்ளது.
உண்மையில் தொழில்நுட்பக் கோளாறால் பாதிக்கப்பட்ட ஈரானிய கப்பலான ஐஆர்ஐஎஸ் லவானுக்கு மனிதாபிமான அடிப்படையில் கொச்சி துறைமுகத்தில் இந்தியா புகலிடம் அளித்துள்ளது. அந்த கப்பலில் இருந்த 183 ஊழியர்களும் தற்போது இந்திய கடற்படையின் பாதுகாப்பில் இருப்பதாக வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆபத்தில் சிக்கிய அண்டை நாட்டு கப்பலுக்கு மனிதாபிமான முறையிலேயே இந்தியா இந்த உதவியைச் செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.