இந்தியா-வங்கதேச வர்த்தகம் 2 நாட்கள் நிறுத்தம்: சாமானியர்கள் பாக்கெட்டில் கைவைக்குமா விலைவாசி?

செய்திப்பிரிவு: அண்டை நாடான வங்கதேசத்தில் தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, இந்தியா-வங்கதேச எல்லைப் பகுதியில் சரக்கு போக்குவரத்து மற்றும் வர்த்தகம் இரண்டு நாட்களுக்கு முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக எல்லைகளில் ஆயிரக்கணக்கான லாரிகள் தேங்கிக் கிடப்பதால், பல கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வர்த்தகம் முடங்கியுள்ளது.
இந்த திடீர் வர்த்தக நிறுத்தத்தால் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயருமா என்ற கவலை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ளது. வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளதால், தினசரி கூலியை நம்பியிருக்கும் லாரி ஓட்டுநர்கள் மற்றும் தொழிலாளர்களின் வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
தற்போது எல்லைப் பகுதிகளில் எல்லைப் பாதுகாப்புப் படை (BSF) தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருவதால் சூழல் அமைதியாக உள்ளது. இருப்பினும், வங்கதேசத்தில் ஒரு நிலையான அரசு அமையும் வரை இந்த வர்த்தக நிச்சயமற்ற தன்மை நீடிக்க வாய்ப்புள்ளதாக வர்த்தகர்கள் கருதுகின்றனர். இந்த முடக்கம் நீடித்தால் சந்தையில் பொருட்களின் தட்டுப்பாடு ஏற்பட்டு விலைவாசி உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.