இந்தியா வங்கதேசம் இடையிலான நட்பு குழாய் மூலம் டீசல் விநியோகம் மீண்டும் தொடங்குகிறது

உலகளாவிய கொந்தளிப்பால் ஏற்பட்டுள்ள கடுமையான எரிபொருள் தட்டுப்பாட்டைப் போக்க வங்கதேசத்திற்கு இந்தியா தனது நட்பு கரத்தை நீட்டியுள்ளது. இதன்படி, அசாமின் நுமலிகார் பகுதியிலிருந்து நட்பு குழாய் வழியாக வரும் செவ்வாய்க்கிழமைக்குள் 5 ஆயிரம் மெட்ரிக் டன் டீசல் வங்கதேசத்தை சென்றடையும். சிலிகுரியிலிருந்தும் எரிபொருள் வழங்க திட்டமிடப்பட்டுள்ள நிலையில், இது அந்நாட்டின் மின்சாரம் மற்றும் விவசாயத் துறைகளுக்கு பெரும் ஊக்கமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
புனித ரமலான் மற்றும் வரவிருக்கும் ஈகைத் திருநாளை முன்னிட்டு மின் தேவையைக் கருத்தில் கொண்டு, அடுத்த நான்கு மாதங்களில் கூடுதலாக 50 ஆயிரம் மெட்ரிக் டன் எரிபொருளை இந்தியாவிடம் வங்கதேசம் கோரியுள்ளது. இரு நாட்டு அமைச்சர்கள் மற்றும் தூதரக அதிகாரிகளுக்கிடையிலான பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இந்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இக்கட்டான சூழலில் இந்தியாவின் இந்த உதவி இரு நாடுகளின் உறவை மேலும் வலுப்படுத்துவதாக அமைந்துள்ளது.