இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்ய வருகிறது இஸ்ரேலின் அயர்ன் டோம் தொழில்நுட்பம்

இந்தியாவின் தற்காப்புத் துறையை வலுப்படுத்த இஸ்ரேலுடன் வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட உள்ளது. பிரதமர் நரேந்திர மோடியின் பயணத்தின் போது புகழ்பெற்ற ‘அயர்ன் டோம்’ ஏவுகணை எதிர்ப்பு அமைப்பின் தொழில்நுட்பத்தை இந்தியாவுடன் பகிர்ந்து கொள்ள இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தூதர் யானிவ் ரேவாச் தெரிவித்துள்ளார். இது வெறும் கொள்முதல் ஒப்பந்தமாக இல்லாமல் ‘மேக் இன் இந்தியா’ திட்டத்தின் கீழ் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்படுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
உலகின் மிகவும் மேம்பட்ட இந்த பாதுகாப்பு அமைப்பு எதிரிகளின் ஏவுகணைகளை நடுவானிலேயே அழிக்கும் திறன் கொண்டது. இரு நாடுகளும் ஒரே மாதிரியான பாதுகாப்பு அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதால் இந்தியாவை ஒரு வலுவான மூலோபாய பங்காளியாக இஸ்ரேல் கருதுகிறது. இந்த தொழில்நுட்ப பகிர்வு இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும்.