ஆட்டோ சீட்டில் உறங்கும் குழந்தை, முன்னே போராடும் தந்தை! கண்கலங்க வைக்கும் வைரல் வீடியோ

சமூக வலைதளங்களில் அவ்வப்போது சில காட்சிகள் நம் இதயத்தை கனக்கச் செய்துவிடும். ஒரு ஆட்டோ ரிக்ஷா, அதன் பின் சீட்டில் நிம்மதியாக உறங்கும் ஒரு சிறுமி, முன்னே குடும்ப பாரத்தை சுமந்து கொண்டு ஆட்டோ ஓட்டும் தந்தை. இந்த எளிய காட்சி இன்று லட்சக்கணக்கானோரின் கண்களைக் குளமாக்கி வருகிறது. இது ஏதோ சினிமா காட்சியல்ல, ஒரு ‘சிங்கிள் பாதரின்’ (Single Father) நிஜ வாழ்க்கைப் போராட்டம்.
ஆயுஷியும் அவளது தந்தையும்:
இன்ஸ்டாகிராமில் வைரலாகி வரும் இந்த வீடியோவில், பயணி ஒருவர் ஆட்டோவில் பயணம் செய்து கொண்டிருக்கும்போது, பின்னால் ஒரு சிறுமி தூங்குவதைக் கவனிக்கிறார். அந்த சிறுமி மிகவும் அப்பாவித்தனமாக ஆட்டோ சீட்டில் சுருண்டு தூங்கிக் கொண்டிருக்கிறாள். அந்தப் பயணி விசாரித்தபோது, ஆட்டோ ஓட்டுநர் அது தனது மகள் ஆயுஷி என்று கூறுகிறார். தனது மனைவி இறந்துவிட்டதாகவும், இப்போது தான் ஒருவனாகவே மகளை வளர்த்து வருவதாகவும் அவர் உருக்கமாகத் தெரிவித்தார். வீட்டில் ஆயுஷியைப் பார்த்துக்கொள்ள யாரும் இல்லாததால், அவர் அவளைத் தன்னுடனேயே ஆட்டோவில் அழைத்துச் செல்கிறார்.
போராட்டமும் அரவணைப்பும்:
ஓடும் ஆட்டோவின் சத்தத்திற்கும் குலுக்கலுக்கும் மத்தியிலும், ஆயுஷி ஆழ்ந்த உறக்கத்தில் இருக்கிறாள். தன் தந்தையின் அரவணைப்பில் உலகின் பாதுகாப்பான இடத்தில் இருப்பது போன்ற ஒரு நிம்மதி அவள் முகத்தில் தெரிகிறது. ஒரு உழைக்கும் தந்தை, தன் குழந்தையின் பசியைப் போக்க வேலைக்கும் செல்ல வேண்டும், அதே சமயம் குழந்தையையும் பராமரிக்க வேண்டும் என்ற இரட்டைப் போராட்டத்தை இந்த வீடியோ பிரதிபலிக்கிறது. வீடியோவின் இறுதியில், அந்தப் பயணி தந்தைக்கும் மகளுக்கும் சிற்றுண்டி வாங்கிக் கொடுக்கிறார். அந்தச் சிறுமியின் வெட்கம் கலந்த புன்னகையும், கையில் குளிர்பான பாட்டிலுடன் அவள் இருக்கும் அழகும் பலரை நெகிழச் செய்துள்ளது.
சமூக வலைதளங்களில் இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, ஆயிரக்கணக்கான மக்கள் அந்த தந்தையின் துணிச்சலைப் பாராட்டி வருகின்றனர். “பல பெற்றோர்கள் தங்களின் கஷ்டங்களை வெளியே காட்டிக்கொள்ளாமல் அமைதியாக எதிர்கொள்கிறார்கள் என்பதற்கு இந்த வீடியோ ஒரு சாட்சி” என்று நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். ஒரு தந்தை தன் குழந்தைக்காக உலகத்தையே எதிர்த்துப் போராடுவார் என்பதை இந்த நெகிழ்ச்சியான சம்பவம் உணர்த்துகிறது.